சென்னை: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தனது தந்தைக்கு ஆடியோக்களை அனுப்பிவிட்டு காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரில் 500க்கும் மேற்பட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
 |
Justice for Rithanya |
ஆனாலும், கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். கணவரும் மன ரீதியாகவும், தொடர்ந்து உடல் ரீதியாகவும் ரிதன்யாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால், ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் வேதனை அடைந்த ரிதன்யா, ஜூன் 28 அன்று மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழப்பதற்கு முன்பு ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று ரிதன்யா கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ரிதன்யாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து, கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அனைத்து வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் மற்றும் அறக்கட்டளையினர் சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே மெளன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இனி ரிதான்யாவுக்கு ஏற்பட்டது போல எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது. என்ன பிரச்சனை இருந்தாலும், தன் மீதே தவறு இருந்தாலும் அதனை வெளிப்படையாக பெண்கள் பெற்றோரிடமோ, தங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடமோ கூற வேண்டும். வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தடுக்கப்பட
வேண்டும் என்று உருக்கமாகப் பேசினர்.
0 comments:
Post a Comment